Friday, 28 October 2011

ஓங்காரம்...!





















ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே.

- திருமந்திரம்.


ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே "ஹரி ஓம்" என்று அதை மாற்றினர்.

அ , உ , ம்

என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி.தமிழைப் பொறுத்தவரை "ஓ" வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான் ஓம். மந்திரங்களை ஓதும் பொழுது ஓம் ஒலியுடன் தொடங்குதல் மரபு.

ஔவை சொல்லும் இடைபிங்கலையின் எழுத்தும் அதுவே!

Thursday, 27 October 2011

கண்ணை வைத்துக் கொண்டு வடையைத் தா!!



ஒரு நாள் கோரக்கர் ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அவ்வீட்டுப் பெண்மணி ஒரு வடையை பிச்சையாக இட்டார். கோரக்கர் அவ்வடையைத் தம்முடைய குருநாதர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையத் தின்ற மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி மறுநாளும் அதுபோல வடை வேண்டும் என்று கேட்டார்.

சீடராகிய கோரக்கர் முதல் நாள் வடையை பிச்சையாக இட்ட வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அன்று அந்த வீட்டுப் பெண்மணி சாதம் போட்டாள்.கோரக்கர் தமக்கு சாதம் தேவை இல்லை என்றும் வடை தான் வேண்டும் என்றும் கேட்டார்.

அதைக் கேட்ட அந்தப் பெண்மணி, நேற்று வடை சுட்டேன். அதனால் வடையை பிச்சையாக இட்டேன். இன்று வடை சுடவில்லையே, இருப்பதைத் தானே கொடுக்க முடியும். இல்லாததைக் கொடு என்றால் என்ன செய்வது? இருப்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்றாள்.

கோரக்கர் அதைக் கேட்டு சமாதானம் அடையவில்லை. தன் குருவானவர் ஒன்றின் மீது ஆசை வைத்துவிட்டார். அதனை நிறைவேற்றுவது சீடராகிய தமது கடமை என்று கூறினார்.

இதைக்கேட்டு எரிச்சலுற்ற பெண்மணி, சரி வடை என்பதால் போயிற்று. இதுவே உன்னுடைய கண்ணைக் கொடு என்றால் உடனே பெயர்த்து கொடுத்து விடுவாயா என்று கோரக்கரிடம் கேட்டாள்.

இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குரு என் கண்ணைக் கேட்டாலும் கொடுக்கக் காத்திருக்கிறேன் என்று கூறி, அந்தக் கண்ணை நீயே வைத்துக் கொண்டு வடை கொடு என்று தன்னுடைய ஒரு கண்ணை பெயர்த்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து விட்டார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப்பெண்மணி, மிகுந்த அச்சம் கொண்டு இனிமையான வடைகளை சுட்டு கோரக்கரிடம் கொடுத்து அனுப்பினாள். அதனைக் கோரக்கர் தன்னுடைய குருவிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.

வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரைப் பார்த்து உனது ஒரு கண் எங்கே என்று கேட்டார். கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். இதனைக் கேட்ட குரு தன் சீடன் தன்மீது வைத்திருந்த அன்பை உணர்ந்து கோரக்கர் இழந்த கண்ணைத் திரும்பப் பெறுமாறு செய்தார்.

Saturday, 22 October 2011

திருவண்ணாமலை சித்தர் - சப்தகந்த அடியார்!



தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வரும் இவர் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம்.

எப்போதும் இவரது உடலில் இருந்து ஒருவித நறுமணம் வீசுமாம். இவரது தலைமுடி பொற்கம்பி இழைகளாக இருக்குமாம். ஆனால் இவைகள் தாமாக எப்போதும் உதிர்வதில்லையாம். மாத சிவராத்தி தொடங்கி ஏழு நாட்கள் இவர் கிரிவலம் செய்யத்தொடங்கும் காலம். இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடி உதிருமாம்.

ஆனால் அப்படி உதிர்ந்தமுடிகள் நம் கண்களில் காண முடியாதாம். அந்தப் பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றுமாம். இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பொன்முடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. அவை சப்தகந்த லிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.

ஒவ்வொரு கிரிவலத்தின் போதும் இவர் தலைமுடி உதிர உதிர இறைவனே அவருக்கு காட்சியளித்து முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது என ஏழு கந்தங்களுக்கும் இறைவன் சொல்வாராம். அப்படி இறைவன் சொல்லிய இடங்களில் தோன்றிய லிங்கங்களே சப்தகந்த லிங்கங்கள் என்றும் கூறப்படுகின்றன.

Friday, 21 October 2011

திருவண்ணாமலை சித்தர் - பத்ராச்சல சுவாமிகள்!



எத்தனையோ சித்தர்கள் ஏன் என்ற சிந்தனை கொள்ளாமல் இறைவன் இங்கு தான் இருக்கின்றான் என்று உறுதி செய்து இறைவனை வழிபட்ட தலம் திருவண்ணாமலை. இந்த அண்ணாமலையில் மனிதர் எவருடைய தயவையும் நாடாமல் தவத்தைத் தொடர்ந்த சித்தர்களுள் பத்ராச்சல சுவாமிகளும் ஒருவர்.

இவரது பூர்வீகம் எது என்று தெரியாத நிலையில் அழுக்குத் துணிமூட்டை ஒன்றைக் கையிலேந்தி காலில் ஒரு வளையம் அணிந்து தேரடிக்கு அருகில் மனித சிந்தனையற்று அமர்ந்திருப்பார். அங்கு படிந்திருக்கும் மணலில் வரிசை வரிசையாக ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். யாரேனும் எதுவும் கேட்டால் கூட பதில் எதுவும் சொல்ல மாட்டார்.

மனிதருக்கு பசியெடுத்தால் பிச்சை எடுக்க வேண்டும் அல்லவா? இவர் எந்த வீட்டிலாவது அல்லது உணவு விடுதியிலாவது யாசகம் கேட்டு யாரும் பார்த்தது இல்லை. இவர் தனக்கு வேண்டிய உணவு உடைக்காக யாருடைய தயவையும் நாடவில்லை. மிகவும் எளிதாகக் கிடைக்க கூடியதும் பிறர் விரும்பாததுமான ஒன்றினை உணவாகக் கொண்டிருந்தார் என்பர்.

அண்ணாமலையாரை மட்டும் அனுதினமும் வணங்கி அமைதியான வாழ்க்கையத் தொடர்ந்த இந்த அபூர்வ சித்தர் சேஷாத்ரி ஆசிரமத்தினருகில் சாமாதியடைந்தார். பிறருக்கு நன்மை செய்யாவிட்டால் கூட எந்தத் தீமையும் செய்யாமலிருத்தல் கூட ஒரு பெரிய தவம் என்று உலகுக்கு உணர்த்திய மகாஞானி இந்தச்சித்தர்.

Monday, 17 October 2011

தங்க மோகம் இல்லாத பெண்...!



சிவவாக்கியர் ஒரு நாள் கொங்கணச் சித்தரைச் சந்திக்க நேரிட்டது. இருவரும் அளவளாவி மகிழ்ந்தார்கள். அதன் பிறகு கொங்கண சித்தர் அடிக்கடி சிவவாக்கியரை வந்து பார்த்துச் செல்வது வழக்கமாக இருந்தது.

கொங்கண சித்தர் பார்க்க வரும் போதெல்லாம் சிவவாக்கியர் மூங்கில் வெட்டுவதும் கூடை பின்னுவதுமாக இருந்ததைப் பார்த்த கொங்கண சித்தர், சிவவாக்கியர் எல்லா வித்தைகள் அறிந்திருந்தும் வறுமையில் உழல்கிறாரே என்று எண்ணி வருந்தினார்.

ஒருநாள் சிவவாக்கியர் இல்லாத போது வந்த கொங்கண சித்தர், சிவாக்கியரின் மனைவியிடம் இரும்புத் துண்டு கொண்டு வரும்படி கூறினார்.அவரும் தேடிப்பிடித்து ஒரு இரும்புத்துண்டை கொண்டு வந்து கொடுத்தார். கொங்கண சித்தரும் அதை உடனே தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனார்.

சிவவாக்கியர் வீட்டிற்கு வந்ததும் நடந்த விபரத்தை அவரது மனைவி கூறவும், சிவவாக்கியர் அந்த தங்கத்துண்டைக் கையால் கூட தொடாமல் கிணற்றில் போடும்படி உத்தரவிட்டார்.

அவரது மனைவியும் அவர் கூறிய படியே அந்தத் தங்கத்துண்டை பாழும் கிணற்றில் போட்டுவிட்டு வந்தார்.

இருப்பினும் சிவவாக்கியருக்கு தனது மனைவி மீது சிறிது சந்தேகம் இருந்தது. ஒருவேளை அவள் தங்கத்தின் மீது ஆசை வைத்திது கொங்கணவரிடம் கேட்டிருப்பாளோ என்று எண்ணி அதனைச் சோதிக்கவும் விரும்பினார்.

ஒரு செங்கல்லை எடுத்து வரச்சொல்லி அதன் மீது சிறுநீர் கழித்தார். பின் அதன் மீது தண்ணீரை ஊற்றும்படி கூறினார். சிறிது நேரத்தில் செங்கல் தங்கமாக மாறியது. அதனை எடுத்துக்கொள்ளும்படி மனைவியிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியோ தனக்கு தங்கம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். மனைவியின் பக்குவத்தை உணர்ந்த சிவவாக்கியரின் மனம் மகிழ்ந்தது.

Saturday, 15 October 2011

திருமாளிகைத்தேவரும் பூஜையும்!



திருமாளிகைத்தேவர் வழக்கம் போல ஆற்றில் நீராடிவிட்டு பூக்கூடையில் பூக்களும் குடத்தில் அபிஷேகத்திற்கான நீரும் எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கிப் புறப்பட்டார். சிறிது தூரம் தான் சென்றிருப்பார். எதிரே ஒரு சவ ஊர்வலம்.

பிணத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே வழியில் கோயிலுக்கு செல்ல முடியுமா? அவர் மீண்டும் குளித்துவிட்டு சென்றால் சாந்தி செய்தது போலாகும். ஆனால் பூஜைக்குரிய காலம் கடந்துவிடுமே என்று கவலையாகி விட்டது சித்தருக்கு. பக்கத்தில் விநாயகர் கோயில் இருந்தது. பிள்ளையாரப்பா இப்போது நீ தான் ஒரு வழி பண்ணனும் என்று வேண்டிக்கொண்டார்.

பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. பாடையில் சவாமாய் கிடந்தவன் உயிர் பெற்று எழுந்தான்.

சரி ஒருநாள் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். இதே போன்ற இக்கட்டுகள் அடிக்கடி வந்தால் என்ன செய்வது என்று யோசித்தார் திருமாளிகைத்தேவர். யோசனை பிறந்தது. நடைமுறைப் படுத்தலானார்.

ஆற்றில் நீராடி அனுஷ்டானங்கள் முடித்ததுமே பூக்கூடையையும் நீர்க் குடத்தையும் ஆகாயத்தை நோக்கி வீசிவிட்டு கோயிலுக்கு நடப்பார். மேலே பூக்கூடையும் நீர்க்குடமும் ஆகாய மார்க்கமாக அவர் கூடவே தொடர்ந்து வரும். கோயில் வாசலுக்கு வந்ததும் அவை அவருடைய கைக்கு வந்து சேரும். அவர் பூஜையை நிமதியாக செய்து முடிப்பார்.

Thursday, 13 October 2011

இடைக்காடரின் வானியல் அறிவு...!



இடைக்காடர் மருத்துவ யோக முறைகளில் போலவே சோதிடத்திலும் வானியலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரும் பஞ்சம் வரப்போவதை அவர் முன்கூட்டியே அறிந்தார். ஊர் மக்களுக்கு சொல்லவும் செய்தார். அவர்கள் அவர் சொல்லை அலட்சியம் பண்ணினார்கள்.  அதனால் அவர்கள் பஞ்சம் வந்த போது பட்டினியால் வாடும்படி நேரிட்டது. அவர்களுடைய கால்நடைகள் மேய்ச்சலின்றி உயிர் விட்டன.

ஆனால், இடைக்காடரின் ஆடுகள் சாகவில்லை.அவர் முன்கூட்டியே தமது ஆடுகளுக்கு எருக்கிலை திண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். எந்த வறட்சிக் காலங்களிலும் எருக்கஞ்செடிகள் மண்டிக்கிடக்கவே செய்யும்.

இடைக்காடர் பஞ்சம் பற்றிய முன்னெச்சரிக்கையுடன் வீடு கட்டும் போது குருவரகு என்னும் தானியத்தை களிமண்ணோடுகலந்து தான் கட்டி இருந்தார். எருக்கிலை தின்ற ஆடுகள் உடலில் அரிப்பு உண்டாகி  அரிப்பைப் போக்கிக் கொள்ள வீட்டுச் சுவர்களில் உராய்ந்துகொண்டன. அப்போது களிமண்ணோடு கலந்திருந்த தானியங்கள் உதிர்ந்தன. அவற்றை சமைத்துண்டு உயிர்பிழைத்தார் இடைக்காட்டுச் சித்தர்.