Wednesday 3 January 2024

அஷ்டகவர்க்கம்...!


ஜோதிடத்தில் பலன் எடுக்க பலவிதமான முறைகள் உண்டு. அதில் ஒன்று அஷ்டகவர்க்கம். இந்த முறையில் ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைய அறிய முடியும். இந்த முறையில் ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கும் தான் நின்ற இடத்திற்குமான பங்களிப்பினை வழங்கும். இந்த பங்களிப்பானது பரல்கள் என்று குறிப்பிடப்படுகின்ற்து.

அஷ்டகவர்க்க முறையில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு இடமில்லை. சூரியன் முதலாக சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு மட்டுமே அஷ்டகவர்க்க அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் 4 பரல்களுக்கு மேல் பெற்றிருந்தால் நல்ல பலனைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். 3 அல்லது அதற்கு கீழான பரல்கள் பெற்றிருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.

அஷ்டகவர்க்க கணிதம் சற்றே சிக்கலானது. இந்தப் பதிவானது அதை விவரிப்பதற்கானதும் அல்ல. சனி என்றாலே எல்லோருக்கும் சற்று பயம் என்று பார்த்தோம் அல்லவா? அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு. அஷ்டகவர்க்கத்தில் மொத்தம் 8 அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அட்டவணை வீதம் 7 அட்டவணையும் இந்த 7 அட்டவணையையும் மொத்தமாக கூட்டி சர்வாஷ்டக வர்க்கம் என்ற அட்டவணையும் உண்டு.

இதில் சனியின் அட்டவணை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சாரம் செய்யும். இந்த காலத்தில் சனி தரும் பலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சனியின் அஷ்டகவர்க்கம் மூலமாக நாம் அறிய முடியும்.

சனி உங்களின் ஜனன ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தற்சமயம் கோட்சாரத்தில் சனி எந்த ராசியில் இருக்கிறது என்று பாருங்கள். கும்ப ராசியில் சனி. உங்கள் ஜாதகத்தின் அடிப்படையிலான சனியின் அஷ்டகவர்க்கத்தில் கும்ப ராசியில் சனி எத்தனை பரல்கள் வாங்கி இருக்கின்றது என்று பாருங்கள். 4 அல்லது அதற்கு மேலான பரல்கள் என்றால் கும்பராசியில் சனி இருக்கப் போகும் 2 1/2 ஆண்டு காலமும் சனியால் பெரிய அளவிலான பிரச்சினைகள் இருக்காது.

கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள். முதல் படம் அஷ்டகவர்க்கத்தின் 8 அட்டவணைகளும் அடங்கியது. இரண்டாவது படம் சனியின் அஷ்டகவர்க்கம். அதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள கும்பராசியில் சனி 2 பரல்கள் மட்டுமே பெற்றிருக்கின்றது. இந்த ஜாதகர் கும்பராசியில் சனி இருக்கும் காலங்களில் அதிகம் சிரமப்பட நேரிடும். இதில் சிம்மம் மற்றும் விருச்சிகத்தில் சனி ஒரு பரல் மட்டுமே பெற்றுள்ளது. அந்த ராசிகளில் கோட்சார சனி வரும் போது அதிக கஷ்டங்களை அனுபவிக்க நேரும்.

சரி இதை எப்படி கணக்கிடுவது என்ற கேள்வி எழலாம். கட்டணம் இல்லாத ஜோதிட மென்பொருட்களில் கூட இதை கணக்கிடும் வசதிகள் இருக்கின்றது.  ஒரு முறை கணக்கிட்டு இந்த அட்டவணைகளை வைத்துக் கொண்டால் போதுமானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம். 





நல்லதோ கெட்டதோ சனி கொடுக்க நினைத்து விட்டால் அதை யாராலும் தடுத்திட முடியாது. நம்மை தற்காத்துக் கொள்ளவே பரிகாரங்கள். சனி என்றாலே எளிமை. பெரும் பொருட்செலவில் பகட்டாக செய்யும் பரிகாரங்களை விட எளிதான பரிகாரங்களை செய்து சனியின் பேரருளைப் பெறலாம். 

Tuesday 2 January 2024

சனிப் பெயர்ச்சி...!



சனிப் பெயர்ச்சி என்றாலே மக்களிடம் ஒரு அதீத பயம் தொற்றிக் கொள்கின்றது. மற்ற கிரகங்களின் பெயர்ச்சி பற்றியோ அல்லது நடப்பு தசாபுத்திகள் பற்றியோ அதிகம் கவலைப் படாதவர்கள் கூட சனிப் பெயர்ச்சி என்றால் கலக்கம் அடைகின்றார்கள்.

சனிப் பெயர்ச்சிக்கு இவ்வளவு பயம்/கலக்கம் தேவையா என்றால் தேவை இல்லை என்பதே உண்மை. ஆனால் சனி பாரபட்சம் பார்க்காமல் பலாபலன்களை வழங்குபவர். நீதி/நேர்மை/ஒழுங்கு/கடமை தவறாமை/வஞ்சகம்/சூழ்ச்சி/களவு போன்ற தேவையற்ற குணநலன்கள்/பண்புகள் போன்றவை இல்லாமல் வாழ்ந்தாலே சனி பாதிப்பை தருவதில்லை.

சரி எல்லாவித நற்பண்புகளோடு நல்ல மனிதராக வாழ்ந்தாலும் சனியின் பாதிப்புகள் இருக்க தானே செய்கின்றது என்று கேட்க தோன்றலாம். முற்பிறவிகளில் நாம் செய்த பாவச்செயல்களின் விளைவை குறிப்பவர் சனி. ஜனன ஜாதகத்தில் சனியின் ஆதிபத்தியம்/சனி அமர்ந்திருக்கும் இடம்/சனியோடு தொடர்பு கொள்ளும் கிரகங்கள்/சனியின் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்,உத்திரட்டாதியில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்/சனியின் பார்வை படும் இடங்கள் மூலமாக மட்டுமே இதை அறிய முடியும்.

பொதுவாக சனி உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 ம்  இடங்களில் ஜனன ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது கோட்சாரத்தில் மேற்கண்ட இடங்களுக்கு பெயர்ச்சி ஆனாலோ பெரிதாக பாதிப்பை தருவதில்லை.

2023 டிசம்பரில் நடந்த சனிப் பெயர்ச்சியை பொறுத்த வரையில் தனுசு,கன்னி,ரிஷபம்,மேஷம் போன்ற நான்கு ராசிகளுக்கு மட்டுமே உபஜெய ஸ்தானத்தில் அடுத்த பெயர்ச்சி வரும் வரையில் சனி இருப்பார். 

சனி உங்கள் ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட எளிதான பரிகாரங்களை பார்க்கலாம். சனி பொதுவாக வயதானவர்கள்/மாற்றுத் திறனாளிகள்/பிச்சைக்காரர்கள்/வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்கள் போன்றோரை குறிக்கும் கிரகம் ஆகும். மேற்கண்டவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை இயன்ற போதெல்லாம் செய்து வந்தாலே சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். அதைவிட்டு விட்டு கோவில் கோவிலாக பரிகாரம் என்ற பெயரில் பொருட்செலவு செய்வதால் பயனில்லை.

சனி கவசத்தை பாராயணம் செய்யலாம். அதற்கும் நேரம் காலம் உண்டு. சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் பாராயணம் செய்ய வேண்டும். இதற்கு வாரம் பத்து நிமிடம் ஒதுக்கினாலே போதுமானது.

சனி கவசத்திற்கான இணைப்பு:



Monday 1 January 2024

காரணமில்லாமல் காரியமில்லை..!


அவதார புருஷர்கள் மறையும் போது அடுத்தடுத்த அவதாரத்தில் முற்பிறவியின் கடமைகள், நிகழ்வுகள் போன்றவை தங்களுக்கு நினைவுக்கு வர சில அடையாளங்களை விட்டுச் செல்வார்கள். அப்படி இராமபிரானால் விட்டுச் செல்லப்பட்டவரே சிரஞ்சீவியான அனுமன்.

இராமாவதாரம் முடிந்து இராமன் வைகுண்டவாசம் புறப்பட்ட நிலையில் தன்னுடன் வருமாறு அனுமனையும் அழைத்தார். அழைப்பினை அனுமன் மறுத்து அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

உங்களை இராமபிரானாகவே இதுவரையில் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். வைகுண்டம் சென்றால் உங்களை விஷ்ணுவாகத் தான் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் சீதா தேவியோடு பார்த்த உங்களை திருமகளோடு பார்க்க என் மனம் ஒப்பாது. மேலும் நான் வைகுண்டம் வரவேண்டும் என்றால் இந்த உடலையும் துறந்தாக வேண்டும்.  அது என்னால் இயலவே இயலாது.

இராமபிரானாக வாழ்ந்த நீங்கள் என்னை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்த  உடல் இது.  இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைந்த இந்த உடலை எப்படி துறப்பேன்? இராமநாமம் எங்கெல்லாம் இப்பூவுலகில் உச்சரிக்கபடுகின்றதோ அங்கெல்லாம் உங்கள் நினைவோடு நான் வாழ்வேன் என்று சொல்லி மறுத்து விட்டார் அனுமன். 

ஆதிசேஷன் இராமாவதாரத்தில் லஷ்மணனாக அவதரித்து இராமனுக்கு சேவை செய்தார். லஷ்மணனையே தனக்கு அண்ணனாக  பலராமராக கிருஷ்ண அவதாரத்தில் பிறக்க வைத்து அவருக்கு பாதசேவை செய்தார் கிருஷ்ணர். அது போன்றே தனக்கு தாசனான அனுமனை தன் கொடியின் சின்னமாக  பிம்ப ஆவாஹனம் செய்து தன் தலைக்கு மேலே உயர்த்தி வைத்தார். கிருஷ்ணரின் தேரில் இருக்கும் கொடியின் சின்னத்தில் அனுமன் இருப்பார்.

மகாபாரதப் போரின் இறுதியில் தேரில் இருந்து அர்ஜூனனையே  முதலில் இறங்கச் சொல்வார் கிருஷ்ணர். ஆனால் முறைப்படி தேர்ப்பாகனே முதலில் இறங்க வேண்டும். இதில் அர்ஜூனனுக்கு மனவருத்தம் இருந்தாலும் கிருஷ்ணர் பேச்சை மீற இயலாத நிலையில்  அர்ஜூனன் முதலில் இறங்குவான். அதன் பிறகே கிருஷ்ணர் இறங்குவார். கிருஷ்ணர் இறங்கிய மறுகணமே தேரின் கொடியில் இருந்த அனுமன் கொடியை விட்டு மறைந்து விடுவார். தேரும் சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். அனுமன் தான் அரணாக காத்து  நின்றார் என்றும் கிருஷ்ணர் ஏன் தன்னை முதலில் இறங்கச் சொன்னார் என்பதையும் அர்ஜூனன் புரிந்து கொள்வான். மீண்டும் தலைப்பை படியுங்கள்.

காரணமில்லாமல் காரியமில்லை. 

Sunday 31 December 2023

குரு பார்க்க கோடி நன்மை...!


*குரு பார்க்க கோடி நன்மை...!*

ஜோதிட உலகில் இந்த வாக்கியம் மிகப் பிரசித்திபெற்ற ஒன்று. ஏன் அப்படின்னு தெரிந்து கொள்ள சின்னதாக ஒரு கதை.

நவக்கிரங்களில் முழுச் சுபர் தேவ குருவான பிரகஸ்பதி. குருவோட மகள் காதலிப்பாங்க.  குருவுக்கு இது தெரிய வரும் போது இந்த திருமணம் நடக்காது.  நடக்கவும் விடமாட்டேன்னு சொல்லுவார். ஏன்னு கேட்கும் போது களத்திர தோஷம் இருக்கு. திருமணம் ஆன முதல் நாள் இரவே கணவன் மரணம் அடைய நேரும். அதனால் திருமணம் கூடாதுன்னு சொல்லுவார்.

ஆனால் திருமணத்தில் விடாப்பிடியாக  காதலர்கள் இருப்பார்கள்.  குருவுக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நாரதர் தான் இதுக்கு  ஒரு தீர்வை முன் வைப்பார்.  அம்பாள் சன்னதியில் விடியற்காலை வெள்ளி முளைக்கும் முன்பு திருமணத்தை நடத்தி விடியும் வரை சன்னதியில் இருந்தால் விடிந்ததும் தோஷம் விலகிடும்ன்னு சொல்லுவார் நாரதர்.

குருவும் அப்படியே செய்யலாம் என்று சொல்லுவார். ஆனால் அதில் ஒரு சிக்கல்ன்னு நாரதர் சொல்லுவார். நாரதர் இருந்தாலே கலகம் தானே. என்ன என்று  குரு கேட்கும் போது
திருமணம் ஆன தம்பதியர் ஒருவரை ஒருவர் தீண்டிடக்  கூடாது.  அதனால குருவான உமது பார்வையில் அவங்க இருவரும் இருக்க வேண்டும். நீர் பார்ப்பது அவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நாரதர் சொல்லுவார்.

நாரதர் சொன்னது போலவே திருமணமும் ஆகி,
தம்பதியர் அம்பாள் முன்பு அமர்ந்திருப்பாங்க. குரு மறைந்திருந்து அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த நேரம் பார்த்து ஒரு புலி சன்னதி உள்ளே  வந்திடும். புலியால் தம்பதியருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுல்ல. அதனால குரு தன்னோட தன்னோட பார்வையால புலியை பார்ப்பார். புலியும் தம்பதியரை ஒன்றும் செய்யாமல் கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவிட்டு விடிந்ததும் போய்விடும். தோஷமும் கழிந்துவிடும்.

புலி சென்ற பின் நாரதர் வருவார். உங்களால தான் எல்லாம் நல்லவிதமாக நடந்ததாக குரு தன் நன்றியை தெரிவிப்பார். அதுக்கு நாரதர் உங்களுக்கும்  ஹனுமனுக்கும் சொந்த பலம் தெரியாது. உங்க பார்வை புலி மேல் பட்டதால் தான் கொடூரமான புலி கூட சாந்தமாகி எதுவும் செய்யாமல் போய்விட்டது. உங்கள்  பார்வைக்கு அவ்ளோ சக்தி உண்டு என்று சொல்லுவார். அதனால தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். 


Tuesday 19 December 2023

மயூர பந்தம்...!


அதி நவீன நவநாகரீக உலகத்தில் வாழ்ந்து வந்தாலும்  பில்லி,சூனியம்,ஏவல் என்று பலதும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிச் செய்த மயூர பந்தம் பயன்படுத்தலாம். 


பாணலிங்கம்...!



கோள வடிவிலான வழவழப்பான தன்மை கொண்ட ஒரு கல். இது தானாக உருவாகக் கூடிய சுயம்பு லிங்கம்.  இந்தியாவில் நர்மதை ஆற்றங்கரையில் அதிகமாக காணக் கிடைக்கின்றது.

வைணவர்களுக்கு சாளக்கிராமம் எப்படி முக்கியமானதோ அப்படி சைவர்களுக்கு முக்கியமானது பாணலிங்கம். வீட்டில் வைத்தும் வழிபடலாம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 

சிவபெருமானை பல ரூபங்களில் வழிபடுகின்றோம். கற்களால் ஆன சிவலிங்கங்களை விட ஸ்படிக லிங்கம் உயர்வானதாகும். ஸ்படிக லிங்கத்தை விட உயர்வானது பாணலிங்கம். 
 

Saturday 9 December 2023

நவக்கிரக தோஷங்கள் நீங்கிட...!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் நவக்கிரகங்களின் தோஷத்தினால் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். இதில் இருந்து விடுபட நமது ஞானிகளும் முனிவர்களும் சித்தர்பெருமக்களும் பல வழிமுறைகளை சொல்லிச் சென்றுள்ளனர். 

அவற்றில் பலதும் இக்காலத்தில் பின்பற்றிட நமக்கு மிகக் கடினமானத் தோன்றும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ஒரு எளிய பாடலின் வழி நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார். 

கந்தர் அந்தாதியில் சேயவன் புந்தி எனத் தொடங்கும் 48 வது பாடல் தான் அது. இதைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கிறார் அருணகிரிநாதர். 


சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே 


நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சித்து பார்க்கலாம்.