Tuesday, 12 August 2025

கோவிலுக்கு குழந்தையை தத்துக் கொடுப்பது எப்படி...!


கோவிலுக்கு குழந்தைகளை தத்துக் கொடுக்கும் வழக்கம் முன்பு போல பெரிய அளவில் இல்லை என்றாலும் இன்றும் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கென்று பிரத்தியேகமான சில நடைமுறைகள் உண்டு. அதற்கு முன் ஏன் தத்துக் கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

குழந்தையின் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் குழந்தைக்கு கண்டம்/சரி செய்ய இயலாத அளவிலான உடல் நலக் கோளாறுகள்/பெற்றோருக்கு குழந்தையினால் பாரிய அளவிலான பாதிப்புகள் வரும் என ஜோதிடர் கணிக்கும் பட்சத்தில் குழந்தையை தத்துக் கொடுக்க பரிந்துரை செய்வார்.


குலதெய்வக் கோவிலுகோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலுக்கோ குழந்தையை தத்துக் கொடுக்கலாம். உக்கிர தெய்வமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.

குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் தான் தத்துக் கொடுக்க வேண்டும். ஒரு செப்புத் தாம்பாளம்/ஒரு தென்னங்கன்று/குழந்தையின் இரு கைகளும் கொள்ளும் அளவிற்கான சில்லறைக் காசுகள் மூன்று மடங்கு இவற்றோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஐயர் உள்ள கோவிலாக பார்த்துச் செல்வது சிறப்பானதாகும்.

காலையில் 11 மணிக்கு முன்பாக சென்று குழந்தையை தத்துக் கொடுத்து விட்டு பெற்றோர்கள் குழந்தையை திரும்பிப் பார்க்காமல் கோவில் எல்லையை தாண்டியோ அல்லது குழந்தை கண்ணில் படாதவாறு சற்று தூரமாகவோ சென்று விட வேண்டும். பிறகு உறவு முறை இல்லாத தம்பதியர் சென்று அந்தக் குழந்தையை தான் வளர்ப்பதாக கூறி கோவிலுக்கு காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொண்டு வரவேண்டும். அப்படி குழந்தையை வாங்கி வந்தபிறகு குழந்தை அணிந்திருக்கும் உடுப்பை பிறர் பயன்படுத்த முடியாதவாறு கிழித்து எறிந்துவிட்டு புது உடுப்பை உடுத்த வேண்டும். இந்த புது உடுப்பை தத்து வாங்கிய தம்பதியரே கோவிலுக்கு வரும் போது தங்கள் செலவில் வாங்கி வரவேண்டும்.

கோவில் எல்லை தாண்டி வந்து குழந்தையை பெற்றொரிடம் ஒப்படைத்து விடவேண்டும். தத்து வாங்கியவரோ பெற்றோரோ அதன் பிறகு அந்தக் குழந்தையின் மீது எந்த உரிமையும் கோரக் கூடாது. அந்த குழந்தைக்கு அதன் பிறகு முக்கியான எந்த விஷயமாக இருந்தாலும் கோவிலில் உத்தரவு வாங்கியே செய்து வரவேண்டும். 

Sunday, 11 May 2025

ஆயுஷ்ய ஹோமம்...!

குழந்தை பிறந்து முதலாம் ஆண்டு நிறைவில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் ஆயுஷ்ய ஹோமமாகும். சில விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த ஹோமத்தை செய்திட வேண்டும். 



1) பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆயுஷ்ய ஹோமம் செய்யக் கூடாது. சூரிய உதயத்தின் பின் தான் செய்ய வேண்டும். 

2)ஹோமத்திற்கு பயன்படுத்தும் சமித்துகளில் சீந்தில் தண்டு மிக முக்கியமானதாகும். 

3)ஒவ்வொரு வருட நிறைவில் ஜென்ம நட்சத்திர நாளில் செய்ய வேண்டும். நல்ல நாள் பார்க்க தேவை இல்லை. 

4) ஹோமத்தை செய்பவர் திருமணமாகி குழந்தைப் பெற்ற பிராமணராக இருக்க வேண்டும். 

5) ஆண் குழந்தையானால் 11 வயதுக்குள்ளும் பெண் குழந்தையானால் பூப்படையும் வயது வரையும் மேற்கண்ட விதிகளை அனுசரித்து செய்ய வேண்டும். 

6) முதல் குழந்தைக்கு செய்யாமல் இரண்டாவது குழந்தைக்கு முதலில் ஆயுஷ்ய ஹோமம் செய்திருந்தால் முதல் குழந்தைக்கு 3வது விதியை அனுசரிக்காமல் ஆயுஷ்ய ஹோமம் செய்யலாம். முதல் குழந்தைக்கு சரியாக செய்திருந்தால் இரண்டாவது குழந்தைக்கும் 3வது விதியை முழுவதுமாக அனுசரித்தே செய்தாக வேண்டும். மற்ற விதிகளில் விலக்குகள் இல்லை. 

Wednesday, 3 January 2024

அஷ்டகவர்க்கம்...!


ஜோதிடத்தில் பலன் எடுக்க பலவிதமான முறைகள் உண்டு. அதில் ஒன்று அஷ்டகவர்க்கம். இந்த முறையில் ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைய அறிய முடியும். இந்த முறையில் ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கும் தான் நின்ற இடத்திற்குமான பங்களிப்பினை வழங்கும். இந்த பங்களிப்பானது பரல்கள் என்று குறிப்பிடப்படுகின்ற்து.

அஷ்டகவர்க்க முறையில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு இடமில்லை. சூரியன் முதலாக சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு மட்டுமே அஷ்டகவர்க்க அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்தில் 4 பரல்களுக்கு மேல் பெற்றிருந்தால் நல்ல பலனைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். 3 அல்லது அதற்கு கீழான பரல்கள் பெற்றிருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.

அஷ்டகவர்க்க கணிதம் சற்றே சிக்கலானது. இந்தப் பதிவானது அதை விவரிப்பதற்கானதும் அல்ல. சனி என்றாலே எல்லோருக்கும் சற்று பயம் என்று பார்த்தோம் அல்லவா? அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு. அஷ்டகவர்க்கத்தில் மொத்தம் 8 அட்டவணைகள் உண்டு. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அட்டவணை வீதம் 7 அட்டவணையும் இந்த 7 அட்டவணையையும் மொத்தமாக கூட்டி சர்வாஷ்டக வர்க்கம் என்ற அட்டவணையும் உண்டு.

இதில் சனியின் அட்டவணை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சாரம் செய்யும். இந்த காலத்தில் சனி தரும் பலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சனியின் அஷ்டகவர்க்கம் மூலமாக நாம் அறிய முடியும்.

சனி உங்களின் ஜனன ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தற்சமயம் கோட்சாரத்தில் சனி எந்த ராசியில் இருக்கிறது என்று பாருங்கள். கும்ப ராசியில் சனி. உங்கள் ஜாதகத்தின் அடிப்படையிலான சனியின் அஷ்டகவர்க்கத்தில் கும்ப ராசியில் சனி எத்தனை பரல்கள் வாங்கி இருக்கின்றது என்று பாருங்கள். 4 அல்லது அதற்கு மேலான பரல்கள் என்றால் கும்பராசியில் சனி இருக்கப் போகும் 2 1/2 ஆண்டு காலமும் சனியால் பெரிய அளவிலான பிரச்சினைகள் இருக்காது.

கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள். முதல் படம் அஷ்டகவர்க்கத்தின் 8 அட்டவணைகளும் அடங்கியது. இரண்டாவது படம் சனியின் அஷ்டகவர்க்கம். அதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள கும்பராசியில் சனி 2 பரல்கள் மட்டுமே பெற்றிருக்கின்றது. இந்த ஜாதகர் கும்பராசியில் சனி இருக்கும் காலங்களில் அதிகம் சிரமப்பட நேரிடும். இதில் சிம்மம் மற்றும் விருச்சிகத்தில் சனி ஒரு பரல் மட்டுமே பெற்றுள்ளது. அந்த ராசிகளில் கோட்சார சனி வரும் போது அதிக கஷ்டங்களை அனுபவிக்க நேரும்.

சரி இதை எப்படி கணக்கிடுவது என்ற கேள்வி எழலாம். கட்டணம் இல்லாத ஜோதிட மென்பொருட்களில் கூட இதை கணக்கிடும் வசதிகள் இருக்கின்றது.  ஒரு முறை கணக்கிட்டு இந்த அட்டவணைகளை வைத்துக் கொண்டால் போதுமானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம். 





நல்லதோ கெட்டதோ சனி கொடுக்க நினைத்து விட்டால் அதை யாராலும் தடுத்திட முடியாது. நம்மை தற்காத்துக் கொள்ளவே பரிகாரங்கள். சனி என்றாலே எளிமை. பெரும் பொருட்செலவில் பகட்டாக செய்யும் பரிகாரங்களை விட எளிதான பரிகாரங்களை செய்து சனியின் பேரருளைப் பெறலாம். 

Tuesday, 2 January 2024

சனிப் பெயர்ச்சி...!



சனிப் பெயர்ச்சி என்றாலே மக்களிடம் ஒரு அதீத பயம் தொற்றிக் கொள்கின்றது. மற்ற கிரகங்களின் பெயர்ச்சி பற்றியோ அல்லது நடப்பு தசாபுத்திகள் பற்றியோ அதிகம் கவலைப் படாதவர்கள் கூட சனிப் பெயர்ச்சி என்றால் கலக்கம் அடைகின்றார்கள்.

சனிப் பெயர்ச்சிக்கு இவ்வளவு பயம்/கலக்கம் தேவையா என்றால் தேவை இல்லை என்பதே உண்மை. ஆனால் சனி பாரபட்சம் பார்க்காமல் பலாபலன்களை வழங்குபவர். நீதி/நேர்மை/ஒழுங்கு/கடமை தவறாமை/வஞ்சகம்/சூழ்ச்சி/களவு போன்ற தேவையற்ற குணநலன்கள்/பண்புகள் போன்றவை இல்லாமல் வாழ்ந்தாலே சனி பாதிப்பை தருவதில்லை.

சரி எல்லாவித நற்பண்புகளோடு நல்ல மனிதராக வாழ்ந்தாலும் சனியின் பாதிப்புகள் இருக்க தானே செய்கின்றது என்று கேட்க தோன்றலாம். முற்பிறவிகளில் நாம் செய்த பாவச்செயல்களின் விளைவை குறிப்பவர் சனி. ஜனன ஜாதகத்தில் சனியின் ஆதிபத்தியம்/சனி அமர்ந்திருக்கும் இடம்/சனியோடு தொடர்பு கொள்ளும் கிரகங்கள்/சனியின் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்,உத்திரட்டாதியில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்/சனியின் பார்வை படும் இடங்கள் மூலமாக மட்டுமே இதை அறிய முடியும்.

பொதுவாக சனி உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 ம்  இடங்களில் ஜனன ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது கோட்சாரத்தில் மேற்கண்ட இடங்களுக்கு பெயர்ச்சி ஆனாலோ பெரிதாக பாதிப்பை தருவதில்லை.

2023 டிசம்பரில் நடந்த சனிப் பெயர்ச்சியை பொறுத்த வரையில் தனுசு,கன்னி,ரிஷபம்,மேஷம் போன்ற நான்கு ராசிகளுக்கு மட்டுமே உபஜெய ஸ்தானத்தில் அடுத்த பெயர்ச்சி வரும் வரையில் சனி இருப்பார். 

சனி உங்கள் ஜாதகத்தில் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட எளிதான பரிகாரங்களை பார்க்கலாம். சனி பொதுவாக வயதானவர்கள்/மாற்றுத் திறனாளிகள்/பிச்சைக்காரர்கள்/வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்கள் போன்றோரை குறிக்கும் கிரகம் ஆகும். மேற்கண்டவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை இயன்ற போதெல்லாம் செய்து வந்தாலே சனி தரும் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். அதைவிட்டு விட்டு கோவில் கோவிலாக பரிகாரம் என்ற பெயரில் பொருட்செலவு செய்வதால் பயனில்லை.

சனி கவசத்தை பாராயணம் செய்யலாம். அதற்கும் நேரம் காலம் உண்டு. சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் பாராயணம் செய்ய வேண்டும். இதற்கு வாரம் பத்து நிமிடம் ஒதுக்கினாலே போதுமானது.

சனி கவசத்திற்கான இணைப்பு:



Monday, 1 January 2024

காரணமில்லாமல் காரியமில்லை..!


அவதார புருஷர்கள் மறையும் போது அடுத்தடுத்த அவதாரத்தில் முற்பிறவியின் கடமைகள், நிகழ்வுகள் போன்றவை தங்களுக்கு நினைவுக்கு வர சில அடையாளங்களை விட்டுச் செல்வார்கள். அப்படி இராமபிரானால் விட்டுச் செல்லப்பட்டவரே சிரஞ்சீவியான அனுமன்.

இராமாவதாரம் முடிந்து இராமன் வைகுண்டவாசம் புறப்பட்ட நிலையில் தன்னுடன் வருமாறு அனுமனையும் அழைத்தார். அழைப்பினை அனுமன் மறுத்து அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

உங்களை இராமபிரானாகவே இதுவரையில் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். வைகுண்டம் சென்றால் உங்களை விஷ்ணுவாகத் தான் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் சீதா தேவியோடு பார்த்த உங்களை திருமகளோடு பார்க்க என் மனம் ஒப்பாது. மேலும் நான் வைகுண்டம் வரவேண்டும் என்றால் இந்த உடலையும் துறந்தாக வேண்டும்.  அது என்னால் இயலவே இயலாது.

இராமபிரானாக வாழ்ந்த நீங்கள் என்னை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்த  உடல் இது.  இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைந்த இந்த உடலை எப்படி துறப்பேன்? இராமநாமம் எங்கெல்லாம் இப்பூவுலகில் உச்சரிக்கபடுகின்றதோ அங்கெல்லாம் உங்கள் நினைவோடு நான் வாழ்வேன் என்று சொல்லி மறுத்து விட்டார் அனுமன். 

ஆதிசேஷன் இராமாவதாரத்தில் லஷ்மணனாக அவதரித்து இராமனுக்கு சேவை செய்தார். லஷ்மணனையே தனக்கு அண்ணனாக  பலராமராக கிருஷ்ண அவதாரத்தில் பிறக்க வைத்து அவருக்கு பாதசேவை செய்தார் கிருஷ்ணர். அது போன்றே தனக்கு தாசனான அனுமனை தன் கொடியின் சின்னமாக  பிம்ப ஆவாஹனம் செய்து தன் தலைக்கு மேலே உயர்த்தி வைத்தார். கிருஷ்ணரின் தேரில் இருக்கும் கொடியின் சின்னத்தில் அனுமன் இருப்பார்.

மகாபாரதப் போரின் இறுதியில் தேரில் இருந்து அர்ஜூனனையே  முதலில் இறங்கச் சொல்வார் கிருஷ்ணர். ஆனால் முறைப்படி தேர்ப்பாகனே முதலில் இறங்க வேண்டும். இதில் அர்ஜூனனுக்கு மனவருத்தம் இருந்தாலும் கிருஷ்ணர் பேச்சை மீற இயலாத நிலையில்  அர்ஜூனன் முதலில் இறங்குவான். அதன் பிறகே கிருஷ்ணர் இறங்குவார். கிருஷ்ணர் இறங்கிய மறுகணமே தேரின் கொடியில் இருந்த அனுமன் கொடியை விட்டு மறைந்து விடுவார். தேரும் சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். அனுமன் தான் அரணாக காத்து  நின்றார் என்றும் கிருஷ்ணர் ஏன் தன்னை முதலில் இறங்கச் சொன்னார் என்பதையும் அர்ஜூனன் புரிந்து கொள்வான். மீண்டும் தலைப்பை படியுங்கள்.

காரணமில்லாமல் காரியமில்லை. 

Sunday, 31 December 2023

குரு பார்க்க கோடி நன்மை...!


*குரு பார்க்க கோடி நன்மை...!*

ஜோதிட உலகில் இந்த வாக்கியம் மிகப் பிரசித்திபெற்ற ஒன்று. ஏன் அப்படின்னு தெரிந்து கொள்ள சின்னதாக ஒரு கதை.

நவக்கிரங்களில் முழுச் சுபர் தேவ குருவான பிரகஸ்பதி. குருவோட மகள் காதலிப்பாங்க.  குருவுக்கு இது தெரிய வரும் போது இந்த திருமணம் நடக்காது.  நடக்கவும் விடமாட்டேன்னு சொல்லுவார். ஏன்னு கேட்கும் போது களத்திர தோஷம் இருக்கு. திருமணம் ஆன முதல் நாள் இரவே கணவன் மரணம் அடைய நேரும். அதனால் திருமணம் கூடாதுன்னு சொல்லுவார்.

ஆனால் திருமணத்தில் விடாப்பிடியாக  காதலர்கள் இருப்பார்கள்.  குருவுக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நாரதர் தான் இதுக்கு  ஒரு தீர்வை முன் வைப்பார்.  அம்பாள் சன்னதியில் விடியற்காலை வெள்ளி முளைக்கும் முன்பு திருமணத்தை நடத்தி விடியும் வரை சன்னதியில் இருந்தால் விடிந்ததும் தோஷம் விலகிடும்ன்னு சொல்லுவார் நாரதர்.

குருவும் அப்படியே செய்யலாம் என்று சொல்லுவார். ஆனால் அதில் ஒரு சிக்கல்ன்னு நாரதர் சொல்லுவார். நாரதர் இருந்தாலே கலகம் தானே. என்ன என்று  குரு கேட்கும் போது
திருமணம் ஆன தம்பதியர் ஒருவரை ஒருவர் தீண்டிடக்  கூடாது.  அதனால குருவான உமது பார்வையில் அவங்க இருவரும் இருக்க வேண்டும். நீர் பார்ப்பது அவங்களுக்கு தெரிய கூடாதுன்னு நாரதர் சொல்லுவார்.

நாரதர் சொன்னது போலவே திருமணமும் ஆகி,
தம்பதியர் அம்பாள் முன்பு அமர்ந்திருப்பாங்க. குரு மறைந்திருந்து அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த நேரம் பார்த்து ஒரு புலி சன்னதி உள்ளே  வந்திடும். புலியால் தம்பதியருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுல்ல. அதனால குரு தன்னோட தன்னோட பார்வையால புலியை பார்ப்பார். புலியும் தம்பதியரை ஒன்றும் செய்யாமல் கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவிட்டு விடிந்ததும் போய்விடும். தோஷமும் கழிந்துவிடும்.

புலி சென்ற பின் நாரதர் வருவார். உங்களால தான் எல்லாம் நல்லவிதமாக நடந்ததாக குரு தன் நன்றியை தெரிவிப்பார். அதுக்கு நாரதர் உங்களுக்கும்  ஹனுமனுக்கும் சொந்த பலம் தெரியாது. உங்க பார்வை புலி மேல் பட்டதால் தான் கொடூரமான புலி கூட சாந்தமாகி எதுவும் செய்யாமல் போய்விட்டது. உங்கள்  பார்வைக்கு அவ்ளோ சக்தி உண்டு என்று சொல்லுவார். அதனால தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். 


Tuesday, 19 December 2023

மயூர பந்தம்...!


அதி நவீன நவநாகரீக உலகத்தில் வாழ்ந்து வந்தாலும்  பில்லி,சூனியம்,ஏவல் என்று பலதும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிச் செய்த மயூர பந்தம் பயன்படுத்தலாம். 


பாணலிங்கம்...!



கோள வடிவிலான வழவழப்பான தன்மை கொண்ட ஒரு கல். இது தானாக உருவாகக் கூடிய சுயம்பு லிங்கம்.  இந்தியாவில் நர்மதை ஆற்றங்கரையில் அதிகமாக காணக் கிடைக்கின்றது.

வைணவர்களுக்கு சாளக்கிராமம் எப்படி முக்கியமானதோ அப்படி சைவர்களுக்கு முக்கியமானது பாணலிங்கம். வீட்டில் வைத்தும் வழிபடலாம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 

சிவபெருமானை பல ரூபங்களில் வழிபடுகின்றோம். கற்களால் ஆன சிவலிங்கங்களை விட ஸ்படிக லிங்கம் உயர்வானதாகும். ஸ்படிக லிங்கத்தை விட உயர்வானது பாணலிங்கம். 
 

Saturday, 9 December 2023

நவக்கிரக தோஷங்கள் நீங்கிட...!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் நவக்கிரகங்களின் தோஷத்தினால் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். இதில் இருந்து விடுபட நமது ஞானிகளும் முனிவர்களும் சித்தர்பெருமக்களும் பல வழிமுறைகளை சொல்லிச் சென்றுள்ளனர். 

அவற்றில் பலதும் இக்காலத்தில் பின்பற்றிட நமக்கு மிகக் கடினமானத் தோன்றும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியில் ஒரு எளிய பாடலின் வழி நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார். 

கந்தர் அந்தாதியில் சேயவன் புந்தி எனத் தொடங்கும் 48 வது பாடல் தான் அது. இதைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கிறார் அருணகிரிநாதர். 


சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே 


நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சித்து பார்க்கலாம். 

Wednesday, 5 July 2023

சரஸ்வதி துதி...!


புத்தகத் துள்ளுறை மாதே
     பூவி லமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்
     வேதப் பொருளுக் கிறைவி
முத்தின் குடையுடை யாளே
     மூவுல குந்தொழு தேத்துஞ்
செப்புக் கவித்த முலையாய்
     செவ்வரி யோடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய்
     சரஸ்வதி யெனுந் திருவே
எக்கால முமுன்னைத் தொழவே
     னியலிசை நாடக மென்னும்
முத்தமிழ்க் கல்விக ளெல்லா
     முழுது மெனக்கருள் செய்தேன்
சித்தந் தன்னில்நீ யிருந்து
    திருவருள் செய்திடு வாயே.

Sunday, 2 July 2023

சனி கவசம்...!

சனி பகவானின் தசா புக்திகள் மற்றும் கோட்சாரத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனியால் வரக் கூடிய பாதிப்புகளில் இருந்து காத்து அருளும் கவசம். 

இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் சனி தரும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். 

*காப்பு*

தேவரெண் டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை சொல்லக்
காரணிந்த யானைமுகன் காப்பு.

*நூல்*

ஆதிவேதாந்த முதலரிய ஞான
வைந்தெழுத்தி னுட்பொருளை அயன்மால் தேடும்

சோதி சிற்றம்ப லத்தி லாடிநின்ற
சுட ரொளியை நீபிடித்த தோஷத்தாலே


பாதி மதிசடைக் கணிய வரவம் பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்


சாதி யில்லா வேடனெச்சில் தின்னவைத்தாய்
சனியனே காகமேறுந் தம்பிரானே


வேலவனை வேங்கைமர மாக்கிவைத்தாய்
விறகுகட்டுச் சொக்கர்தமை விற்கவைத்தாய்


மாலவனை யுரலோடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக் குறவறது வனத்தில் வைத்தாய்


காலனைமார்க் கண்டணுக்கா வரனுதைத்த
காரணமு நீபிடித்த கருமத்தாலே


சாலவுனையான் றொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


மஞ்சுதவ ளயோத்தியில்வாழ் தசரதன்றன்
மக்களையும் வனவாச மாக்கிவைத்தாய்


பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடு பாடைவர் படச்செய் வித்தாய்


எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டை விற்றே
யிழிகுலத்தி லடிமையுற விசையவைத்தாய்


தஞ்சமென வுனைப் பணிந்தே னெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


அண்டமாயிரத் தெட்டுமரசு செய்த
வடல்சூர பதுமனைய   மடக்கி வைத்தாய்


மண்டலத்தை யாண்டநளச் சக்ரவர்த்தி
மனைவியொடு வனமதனி லலையச் செய்தாய்


விண்டலத்தை பானுகோ பன்தன்னாலே
வெந்தணலாக்கிச் சூரரை வெருவச் செய்தாய்


தெண்டனிட்டே னெந்நாளு மெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அண்டர்கோன் மேனியிற் கண்ணாக்கு வித்தாய்
அயன்சிரத்தை வயிரவனா லறுக்க செய்தாய்


திண்டிறகொள் கெளதமனா லகலிகைதான்
சிலையாகும்படி சாப முறவே செய்தாய்


தண்டரள நகையிரவி மாரன் தன்னைச்
சங்கரனார் நுதல்தவிழியிற் றணல்செய் வித்தாய்


சண்டமிலா துனைத்தொழுதே னெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


பாருலவு பரிதியைப்பல் லுதிரவைத்தாய்
பஞ்சவர்க்குக் கண்ணனை தூதாக்கி வைத்தாய்


தாருலவு வாலி சுக்ரீவன் றம்மைத்
தாரையினால் தீராத சமர் செய்வித்தாய்


சூரனெனு மிலங்கைரா வணன்றன் தங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்


தாரணியு மணிமார்பாவெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


சுக்ரன்றன் கண்ணிழந்தான் னிலங்கையாண்டு
துலங்கும் ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்


மிக்கபுக ழிரணியென்றான் வீறழிந்தான்
விளங்குதிரி புராதிகளும் வெந்துமாண்டார்


சக்கரத்தா லுடலறுந்தான் சலந்தரன்றான்
தாருகாசுரனு  மேசமரில் மாண்டான்


தக்கன்மிகச் சிரமழிந்தா நிந்தோழத்தால்
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அந்தமுள வைங்கரன் கொம் பறவேசெய்தாய்
அறுமுனிவர் மனைவிகள்கற் பழியச்செய்தாய்


சந்திரன்றன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சைதா னெடுக்கச் செய்தாய்


தந்தமுகச் சூரனுயிர் தளரச் செய்தாய்
சாரங்க தரன் கரத்தை தறிக்கச்செய்தாய்


சந்ததமு முனைப்பணிந்தே னெனைத் தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே

சீதைதனை யிராவணறாற்  சிறைசெய்வித்தாய்
தேவர்களைச் சூரனாற் சிறைசெய்வித்தாய்


மாதுதுரோ பதைதுகிலை வாங்கு வித்தாய்
மகேச்சுரனை யுமைபிரியும் வகை செய்வித்தாய்


போதிலயன் தாளி ற்றளைப் பூட்டிவித்தாய்
பொதிகையினிலகத்தியனை பொருந்தச் செய்தாய்


தாதுசேர் மலர்மார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அப்பர்தமை கருங்கல் லோடலையிற் சேர்த்தாய்
யரனடியில் முயலகனை அடங்கச்செய்தாய்


செப்புமா ணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
திருமாலை மச்சவுரு வெடுக்கச்செய்தாய்


ஒப்பிலநு மான்வாலி லொளிர் தீயிட்டாய்
ஒலிகடலி னஞ்சையர  ணுண்ண வைத்தாய்


தப்பிலா துனைத் தொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


நீரினையுண்ட டெழுமேக வண்ணா போற்றி
நெடுந்தவத்தில் உறுகமலக் கண்ணா போற்றி


சூரியன்றன் றவத்தில்வந்த பாலா போற்றி
தூயநவக் கிரகத்துள்  மேலா போற்றி


காரியெனும்  பேர்கொளும் காரா போற்றி
காசினியில் கீர்த்திபெற்ற தீரா போற்றி

மூரிகொளு நோய்முகவா முடவா போற்றி
முதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி!!!

Saturday, 1 July 2023

காலசர்ப்ப தோஷம்...!

சோதிடத்தில், ராகு-கேது கிரகங்களின் பார்வையினால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விளைவுகளையுமே நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கின்றனர். சோதிடவியலில் நாகதோஷம் கடுமையானது அல்லது துயரம் மிகுந்த ஒன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடும் உத்திகளைத்தான் பொதுவில் பரிகாரம் என்கின்றனர்.

போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....

பிறப்பினால் ஒருவரின் ஜாதக அமைப்பில் ராகு, கேது கிரகங்கள், சில இடங்களில் அமைவதால் நாகதோஷம் ஏற்படுவது ஒருவகை என்றும், பாம்பு புற்றினை இடித்தல் அல்லது பாம்புகளை கொல்வது போன்ற பாவச் செயல்களினால் நாகதோஷம் ஏற்படுவது இன்னொரு வகை என்கிறார்.

போகர் பாம்புகளை “உயிர் விழுங்கிகள்” என்கிறார். உறுப்புகளற்ற இந்த உயிரினம், ஒன்றுதான் இரையினை உயிருடன் விழுங்குவதாகவும், தினம் தினம் இவற்றில் உயிர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இருளுக்குள் அடைந்துவாழும் பாம்பின் பிறப்பு என்பது ஒரு வகையான சாபம் பெற்ற பிறப்பு என்றும், இவற்றைக் கொல்வதால் அந்த சாபம் கொல்பவரை தொற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறார்.

பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார். கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.

இத்தகைய நாக தோஷம் உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாரிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் உருவாகும். முறையான பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தடைகள் நீங்கி சுக வாழ்வு வாழலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி”.

  அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே போகர் சொல்லி இருக்கிறார் .. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.

சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...

ஆவனி மாதத்து வளர்பிறை பஞ்சமியான,அதாவது அம்மாவாசை கழித்து ஐந்தாவது நாளான ”நாக பஞ்சமி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.


நாகதோஷம் உள்ளவர்கள், *ஆவணி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று செய்ய வழி இல்லாவிட்டால் தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்* நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்.

பிரதிஷ்டை செய்த நாளையும் சேர்த்து 11,13,21,24,48 நாட்களுக்கு தினமும் வழிபட்டு வரலாம்.

அப்படி செய்ய இயலாதவர்கள் முதல் நாள் பிரதிஷ்டை முடிந்து வணங்கிவிட்டு,  மீதி நாட்களுக்கு பிராமண அர்ச்சகர் மூலமாக தினமும் நைவேத்யம் படைத்து வர சொல்லலாம்.

முதல் நாள் பிரதிஷ்டையின் போது மனம் போன போக்கில் எதை எதையோ வேண்டிக் கொண்டிருக்காமல்,முழு மனதோடு பயபக்தியோடு மனதை ஒருமுகப் படுத்தி தனக்கு எது முதன்மையானதாக தேவையோ அதை வேண்டிக் கொள்ளலாம்.

நன்றி : wwww.siththarkal.com

Sunday, 2 October 2022

விபத்துகளில் இருந்து தற்காத்திட...!

ஓம் சரவணபவ

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடி சரணம். 

விபத்துகள் பற்றிய செய்திகள் வராத நாட்களே இல்லை. வாகனத்தில் பயணிக்கும் போது அல்லது ஏதோ ஒரு வேலையை செய்யும் போது கவனக் குறைவாலோ அல்லது மற்ற புறக்காரணிகளாலோ ஏற்படும் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளியது தான் இரத பந்தம். 

பயணத்தின் போதும் பாதுகாப்பற்ற கடினமான வேலைகளை செய்யும் போதும் இரத பந்தத்தை உடன் வைத்திருந்தாலோ அல்லது பாராயணம் செய்துவிட்டு ஆரம்பித்தாலோ விபத்து மற்றும் விபத்து பற்றிய பயம் விலகும். 

நன்றி : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருள் நெறிச் சபை. 

Wednesday, 18 August 2021

சகல செல்வத்தையும் பெற்றிட...!

சனிக் கிழமையில் ரோகிணியுடன் கூடிய அமிர்தகடிகையில் தங்க ஆபரணம் செய்து, அதே நாளில் அதை வாங்கி ஒருவன் அணிந்து கொண்டால், அவன் சகலவித ஆபரணங்களோடு சகல செல்வத்தையும் பெற்று சுகவாசியாக அழியாத சொத்தைப் பெற்று வாழ்வான்.

Tuesday, 17 August 2021

ஆவணி மூலம்...!

ஆவணி மூலத்து உதையம் கதிர்மறையின்

மேவி முலகில் விளைவுண்டாம் - பூவில்

வெயில் எறிக்குமாயின் வீணே உலகில் 

எரிபரக்கும் என்றே இயம்பு


ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சூரிய உதயத்தை மேகம் மறைத்து இருள் சூழுமானால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும். மேகங்கள் இன்றி வானம் சுத்தமாக இருந்து வெயிலடிக்குமானால் அந்த ஆண்டு முழுவதும் மழையின்றி வாட்டம் உண்டாகும். 


Tuesday, 28 November 2017

எண் கணிதம்...!


பிறப்பு எண் - பிறந்த திகதியை மட்டும்
கூட்டி வரும் எண்.

கூட்டு எண் - பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கூட்டி வரும் எண்.

பெயர் எண் - பெயரிலுள்ள எழுத்துக்களுக்கான எண்களை கூட்டி வரும் எண்.

இனி ஒரு உதாரணம் வழியாக கீழுள்ள அட்டவணைகள் கொண்டு பெயர் எண் கணக்கிடும் முறையை காண்போம். ஒரு குழந்தை 9/11/2017 பிறந்ததாக எடுத்துக் கொள்வோம்.

பிறப்பு எண் 9
கூட்டு எண் 3

பிறப்பு எண்ணுக்கும் கூட்டு எண்ணுக்கும் பொருந்தும் எண் மட்டுமே பெயர் எண்ணாக வரவேண்டும். அப்படி அட்டவணையை பார்க்கும் போது 9 க்கு 3 என்றால் பெயர் எண் 9 என்பதே சரி.

பெயர் எண் 9 என்று வரும் போது 9,18,27,36,45,54,63,72,81 ஆகிய கூட்டுக் தொகை வரும் பெயர்களை சூட்டலாம். இது பொதுவாக சரி தான் என்றாலும் இதில் குறிப்பிட்டு இருக்கும் எண்கள் எல்லாம் சிறந்ததா என்றால் இல்லை என்பதே சரி.

பெயர் எண் 9 க்கு 45 மட்டுமே ஆகச் சிறந்தது. 45 அமையாத பட்சத்தில் 27 சிறந்தது.

எண்களுக்கு உரிய அதிர்ஷ்ட திகதிகள் என்று வரும் போது பிறப்பு எண்ணை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். 



பெயர் எண் 1 -  19, 46
பெயர் எண் 5 -  23, 41
 பெயர் எண் 6 -  24, 33
 பெயர் எண் 9 -  27, 45

Friday, 28 July 2017

அன்னை ஸ்ரீபால திரிபுரசுந்தரி துதி...!





தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவள்
நாடி வந்த அன்பருக்கு நன்மை யாவும் செய்பவள்

(தேடுகின்ற நெஞ்சினிற்குள்...)

ஓடி வந்து உட்கலந்து சோதியாகி
நின்றவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஓடி வந்து உட்கலந்து ...)

(ஆதி அந்தமாகி நின்ற ... கோரஸ்)

மூன்றெழுத்து மந்திரத்தை மூலமாகக் கொண்டவள்
மூன்று நாதர் அவர்க்கும் தானே தாயுமாக  இருப்பவள்

(மூன்றெழுத்து மந்திரத்தை...)

மூவுலகை காத்து நிற்கும் சக்தியாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(மூவுலகை காத்து நிற்கும்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்

அம்மா என் அம்மா அம்மா அம்மா 

கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள்
காமன் மந்திரம் தனை மத்தியிலே வைத்தவள்

(கலைமகளின் மந்திரத்தை...)

செளக்கியம் தரும் மந்திரத்தை இறுதியாகக் கொண்டவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(செளக்கியம் தரும் ...)

(ஆதி அந்த மாகி நின்ற...கோரஸ்)

அன்பு கொண்ட நெஞ்சம் தனை அரியணையாய் வைத்தவள்
ஆசை கொண்டு அழைத்த போது ஓடி வந்து நிற்பவள்

(அன்பு கொண்ட நெஞ்சம்...)

இச்சை கொண்டு வந்து சேர்ந்து இன்பமுறச் செய்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(இச்சை கொண்டு ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

ஈசன் முதல் தேவர் போற்றும் கன்னி தெய்வமானவள்
உயிருமாகி உடலுமாகி உணர்வுமாக இருப்பவள்

ஊக்கம் தந்து சோர்வு நீக்கி வேகந்தனை தருபவள்
ஆதி அந்த மாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஊக்கம் தந்து சோர்வு ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
என்று அவளை பார்ப்போம் என
ஏக்கமுறச் செய்பவள்

அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மம்மா 

என்று அவளை பார்ப்போம் என ஏக்கமுறச் செய்பவள்
ஏக்கம் தனை தீர்ப்பது போல் எதிரில் வந்து நிற்பவள்

(என்று அவளை பார்ப்போம்...)

ஐயம் தொலைத்த மனதினுள்ளே ஐக்கியமாகி நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஐயம் தொலைத்த ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

ஒடுங்குகின்ற மனதினுள்ளே ஒளிமயமாய் வருபவள்
ஓடும் மனதை தடுத்தி நிறுத்தி ஆனந்தத்தை தருபவள்

(ஒடுங்குகின்ற மனதினுள்ளே...)

ஓளடதமாய் பிறவிப் பிணியை தீர்த்து நம்மைக் காப்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்

கஞ்சமலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள்
தஞ்சம் என்று வந்தவரை தாங்கி நிற்கும் தாயவள்

கொஞ்சும் சலங்கை சலசலக்க ஓடி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(கொஞ்சும் சலங்கை ...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

கவலை கொண்டு கதறும் போது கடுகி வந்து காப்பவள்
கருணை கண்கள் கொண்டு நம்மை விழி இமை போல காப்பவள்

(கவலை கொண்டு கதறும்...)

நெக்குறுகி அழைக்கும் போது சொக்கி வந்து நிற்பவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(நெக்குறுகி அழைக்கும்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்

அம்மா என் அம்மா அம்மா அம்மா அம்மம்மம்மா

வினையறுத்து பகைமுடித்து விதியை மாற்றி வைப்பவள்
சதி ஒளித்து செருக்கறுத்து மதியை தெளிவு செய்பவள்

(வினையறுத்து பகைமுடித்து...)

குதித்து ஓடும் மனதை அடக்கி நிதியம் அருளைத் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(குதித்து ஓடும் மனதை...)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

குஞ்சலங்கள் ஆட ஆட குதித்து குதித்து வருபவள்
குறைகள் தீர்த்து குலத்தைக் காத்து குதூகலத்தைத் தருபவள்

(குஞ்சலங்கள் ஆட ஆட...)

குணத்தை செம்மையாக்கி வைக்கும் குற்றமில்லா குரு அவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(குணத்தை செம்மையாக்கி...)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

கொஞ்சிக் கொஞ்சிக் அழைக்கையிலே குழந்தையாக வருபவள்
வஞ்சனைகள் செய்பவரை வந்து நின்று ஒழிப்பவள்

(கொஞ்சிக் கொஞ்சிக்...)

தலை வணங்கி தாழ் பணிய வரமும் அருளும் தருபவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

(தலை வணங்கி தாழ்...)

(ஆதி அந்தமாகி நின்ற ...கோரஸ்)

(ஆதி அந்தமாகி நின்ற...கோரஸ்)

ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்
ஆதி அந்தமாகி நின்ற அன்னை பாலை தானவள்

அன்னை பாலை தானவள்
அன்னை பாலை தானவள்

Tuesday, 6 December 2011

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..."

என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.

இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.

இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..

தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.

இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.

Saturday, 3 December 2011

சக்தி இல்லையேல் சிவனில்லை!

பிருங்கி முனிவர் வெகுகாலம் தவம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றிருந்தார். சிவனை மட்டுமே வழிபடுபவர். தினசரி சிவலோகம் சென்று சிவனை சுற்றிவந்து வழிபட்டுவிட்டு தான் அன்றைய வேலைகளை கவனிப்பார். இதைப் பார்த்த அன்னை பராசக்தி, சிவனிடம் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் போது பிருங்கி என்னைவிட்டு விட்டு உங்களை மட்டும் வழிபடுவது சரியா என்று கேட்டாள். அதற்கு சிவனோ அவன் என் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். என்னை வழிபட்டாலே உன்னையும் வழிபடுவது போல தான். அதனால் தவறாக எண்ணாதே என்று சொல்லிவிட்டார்.

ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.

இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.

சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.

Friday, 4 November 2011

திருநீறு குழந்தையான கதை...!

மச்சேந்திரர் ஒரு ஊரின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் அவரைக் கண்டு பிச்சையிட்டாள். ஆனால் அவளது முகம் வாடியிருந்தது. அதைக் கண்ணுற்ற மச்சேந்திரர் உன் குறை என்ன என்று கேட்க அவளோ தனக்கு மக்கட்பேறு இல்லை எனக் கூறினாள்.

மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு சிறிது திருநீற்றை அளித்தார். இதனை நீ உட்கொண்டால் மக்கட்பேற்றை அடைவாய் என்று வாழ்த்திச் சென்றார்.

திருநீறு பெற்றவள் அதனை உட்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் தெரிவித்தாள். பக்கத்து வீட்டுக்காரியோ உனக்கு திருநீறு கொடுத்தவர் போலித்துறவியா கூட இருக்கலாம். உன்னை மயக்கி அடைவதற்காக கூட இத்திருநீற்றை கொடுத்து இருக்கலாம் என்று கூறினாள். ஆகவே நீ  திருநீற்றை உட்கொள்ளாதே என்றாள்.

இதனால் அச்சம் அடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் போட்டுவிட்டாள்.

சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் மறுபடியும் அந்த ஊருக்கு வந்தார். தான் முன்பு பிள்ளைப்பேற்றிற்காக  திருநீறு அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று,அம்மணி உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும் அவனை அழைப்பாயாக என்றார்.

பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு திருநீற்றை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்போது குழந்தை இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.

அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய மச்சேந்திரர், சரி அந்த திருநீற்றை எங்கு கொட்டினாய் என்றார். அவளும் அடுப்பு சாம்பலை வழக்கமாக கொட்டும் இடத்தில் தான் அந்த திருநீறு இருந்த சாம்பலையும்  கொட்டியதாக சொல்லி, அச்சாம்பல் கொட்டப்பட்டு இருந்த குப்பை மேட்டை காட்டினாள்.

மச்சேந்திரர் குப்பைப்பட்டரையிடம் சென்று கோரக்கா என்று கூப்பிட்டார். குப்பைப் பட்டறையில் இருந்து ஏன் என்னும் ஒலி கேட்டது.

மச்சேந்திரர் அங்கிருந்தவர்களிடம் குப்பையை அகற்றுமாறு கூறினார். அதிலிருந்து குழந்தை ஒன்று, மச்சேந்திரர் திருநீறு கொடுத்த காலத்திலிருந்து இருக்க வேண்டிய வளர்ச்சியோடு வெளியில் வந்தது.

மச்சேந்திரர் அக்குழந்தையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையோ பெண்மணியிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சேந்திரரை பின் தொடர்ந்து சென்று பெரிய சித்தர் ஆகி குருவை மிஞ்சிய சீடர் ஆனார்.